கூகிளிற்கு எதிராக வழக்கு ஜூலை 13, 2007
Posted by pctimes in இணையம், செய்தி.2 comments
அவுஸ்ரேலியாவின் நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆணைக்குழு, கூகிள் நிறுவனம் தமது தேடற்பொறியில் வழங்கும் தேடல் முடிவுகளை சரியான முறையில் வகைப்பிரித்துக் காட்டாமல் பயனர்களை தேவையில்லாத கஷ்டத்தில் ஆழ்த்துவதாகக் கூறி கூகிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு இணையப்பயனர்களை பொருத்தமற்ற வகையில் வழிகாட்டுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள உலகின் முதலாவது வழக்கு இதுவாகும்.
கூகிள் தேடற்பொறியில் தேடல் மேற்கொள்கையில் பெறப்படும் தேடல் பெறுபேறுகளில், அனுசரனையாளர்களின் இணைப்பும், “சாதாரண” இணையத்தளங்களின் இணைப்பும் காணப்படும். இந்த இரண்டு நிலை இணைப்புகளையும், கூகிள் நிறுவனம் சரியான முறையில் வேறுபடுத்திக் காட்டவில்லை என குறிப்பிடும் அவுஸ்ரேலிய நுகர்வோர் ஆணைக்குழு தெரிவிக்கும் அதேவேளை இதனைத் தடுக்கும் பொருட்டே, தாம் வழக்குத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றது.
இந்த வழக்கின் எதிராளிகளாக கூகிள், கூகிள் அயர்லாந்து மற்றும் கூகிள் அவுஸ்ரேலியா ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த வழக்குத் தொடர்பில் நாம் கடுமையாக எமது பக்க விடயங்களை சொல்லி இதில் வெற்றி பெறுவோம். இந்தக் குற்றச்சாட்டு யாவும் அடிப்படையற்றது” என கூகிள் அவுஸ்ரேலியாவின் பேச்சாளர் Rob Shilkin கருத்துத் தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.