YouTube இற்கு LG கையடக்கத் தொலைபேசி தயாரிக்கிறது ஜூலை 3, 2007
Posted by pctimes in சாதனம், செய்தி.3 comments
உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வுத் தளமான YouTube இற்காக கையடக்கத் தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் ஒப்பந்தமொன்றில் தென் கொரியாவின் நிறுவனமான LG Electronics அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியே வீடியோ கோப்புகளை மேலேற்றவும் (Upload), பார்வையிடவும், பகிர்ந்து கொள்ளவும் பயனர்களுக்கு சாத்தியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரு கணினி செய்யும் வேலைகளை இக்கையடக்கத் தொலைபேசி செய்யப்போகிறது என்பதுதான் சுருக்கமான தகவலாகும்.
சாதாரணமாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் பயனர்கள் YouTube இணையத்தளத்திற்கு வருகை தருவதோடு இதுவரையில் பயனர்களால் சுமார் 70,000 இற்கும் அதிகமான வீடியோ கோப்புகள் இத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான LGஆனது, YouTube இன் சொந்தக்காரர்களான Google உடனும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது கவனிப்பட வேண்டிய விடயம்.
Google சேவைகளை நேரடியாக இணைப்பில் ஏற்படுத்தக்கூடிய மூன்றாம் தலைமுறைக்குச் சொந்தமான “Google phone” எனப்படும் கையடக்கத் தொலைபேசியை கடந்த மாதம் ஐரோப்பாவில் LG நிறுவனம் விற்பனைக்கு விட்டது. இந்தக் கையடக்கத் தொலைபேசி மூலம் Google Search, Gmail மற்றும் Google map போன்ற சேவைகளுக்கு இலகுவில் இணைப்பை ஏற்படுத்த முடியுமென சொல்லப்படுகிறது.
1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடந்த வருடம் YouTube இனை Google வாங்கியது நீங்கள் அறிந்ததே!!